Share via:
மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ஸ்வெட்டர் தற்போது 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அரசர் சார்லசின் முதல் மனைவியான டயானா கடந்த 1997ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார். டயானாவின் இந்த திடீர் மரணம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 39 வயதில் உயிரிழந்த டயானா பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு அவை அதிக விலைக்கு போவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 1981ம் ஆண்டு டயானா தனது கணவர் சார்லசுடன் கோல்ப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த சிவப்பு நிற ஸ்வெட்டரில் வரிசையாக வெள்ளை ஆடுகளின் படமும், ஒரேயொரு கருப்பு நிற ஆடு மட்டும் இருக்கும். அந்த நேரத்தில் இந்த ஸ்வெட்டர் பரபரப்பாக பேசப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் அதே ஸ்வெட்டரை 1983ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும் டயானா அணிந்திருந்தார். இந்த ஸ்வெட்டர் தான் தற்போது 1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் ஏலம் போனது. இந்திய மதிப்பில்ல் இது சுமார் 9 கோடி ரூபாய் என்பதால் சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் டயானா பயன்படுத்திய ஊதா நிற கவுன் ரூ.4.9 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

