Share via:
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023 -2024ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சிப் பட்டியலில் தமிழகம் மாபெரும் சாதனை படைத்துள்ளதாக தி.மு.க.வும், வேதனைப் பட்டியல் என்று அண்ணாமலையும் எடுத்துக் காட்டியிருப்பது குழப்பதை உருவாக்கியுள்ளது.
தி.மு.க.வினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, ’ஓட்டுமொத்த இந்தியாவின் சராசரி வளர்ச்சிக் குறியீடு 71 புள்ளிகள் என்ற நிலையில், 78 புள்ளிகளை பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளது தமிழ்நாடு.
இந்தியாவின் சராசரி வறுமை ஒழிப்பில் 72 என இருக்கும் நிலையில் தமிழ்நாடு 92 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளது. பசி பிணி போக்குதலில் இந்தியாவின் சராசரி – 52 சதவிகிதமாக இருக்கும்போது தமிழ்நாடு 75 புள்ளிகளை பெற்று 6-வது இடம் பெற்றுள்ளது.
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் இந்தியாவின் சராசரி – 77 ஆக இருக்கும்போது தமிழ்நாடு 77 புள்ளிகளை பெற்று 8-வது இடம் பிடித்துள்ளது. தரமான கல்வியில் இந்தியாவின் சராசரி 61 என இருக்கும்போது தமிழ்நாடு 76 புள்ளிகளை பெற்று 3வது பிடித்துள்ளது. பாலின சமத்துவத்தில் இந்தியாவின் சராசரி 49 புள்ளிகள் எனும்போது தமிழ்நாடு 53 புள்ளிகளை பெற்று 11-வது இடத்தில் உள்ளது. இந்த வகையில் மொத்தமுள்ள 16 இலக்குகளில் வறுமை ஒழிப்பு, குறைந்த விலை மின்சாரம் மற்றும் காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 16 இலக்குகளில் இந்தியாவின் சராசரியை விட 13 இலக்குகளில் அதிக புள்ளிகளை பெற்று தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்று பெருமைப்பட்டு வருகிறார்கள்.
அதேநேரம் பா.ஜ.க.வின் அண்ணாமலை, ‘’நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஆண் பெண் சமத்துவக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரக் குறியீட்டில் 9 ஆவது இடத்திலும், நிலையான நகரங்கள் மற்றும் சமூகக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்திக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், நிலத்தில் வாழ்க்கைக் குறியீட்டில் 15 ஆவது இடத்திலும், அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனக் குறியீட்டில், 9 ஆவது இடத்திலும் எனப் பல குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட மிகுந்த பின்னிடவை சந்தித்துள்ளது.
குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறை, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போவதும், சுமார் 11% அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்களும், தற்கொலைகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதும், புதிய கண்டுபிடிப்புத் திறன் 37.91% லிருந்து, பாதிக்கும் மேல், 15.69% ஆகக் குறைந்திருப்பதும், மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும், சாலை விபத்துக்கள் அதிகரித்திருப்பதற்கு, தமிழகம் முழுவதும் நடக்கும் கட்டுப்பாடற்ற மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையே, அடிப்படைக் காரணமாக இருப்பதை மிக எளிதாக உணர முடிகிறது. திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளாகவும் குறைபாடுகளாகவும் தமிழக பாஜக இதுவரை தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டிய பல விஷயங்களை நிதி ஆயோக் அறிக்கை பிரதிபலித்துள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.
இப்படி ஆளுக்கு ஒரு திசையில் பிடித்து இழுத்தால் தமிழக மக்களுக்கு குழப்பமோ குழப்பம்தான்.