News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அண்ணன் திருமாவளவன் முதல்வராக என் உயிரைக் கொடுத்தும் உழைக்கத் தயாராக இருக்கிறேன் என்று பேசிய நாம் தமிழர் சீமானுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது நாம் தமிழர் கட்சியினரை அதிர வைத்துள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ‘திருமாவளவன் தமிழக முதல்வராக ஆசைப்படுவது எல்லாம் அபத்தமானது. அவர் அருந்ததிய மக்களுக்கு எதிரி’ என்ற ரீதியில் பேசியிருந்தார். இதற்குத்தான் சீமான், ‘என் உயிரைக் கொடுத்தாவது திருமாவளவனை முதல்வர் ஆக்குவேன்’ என்று ஆவேசம் காட்டியிருந்தார்.

இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘’உயிரைக் கொடுத்தெல்லாம் திருமாவளவனை முதல்வராக்க வேண்டாம். உயிரோடு இருக்கும்போது உழைத்து முதல்வர் ஆக்குங்கள்’’ என்று கிண்டல் செய்திருந்தார்கள். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச்செல்வன், ‘’விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்தும் எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் குறித்தும் பாஜகவை சார்ந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசுவது விமர்சனம் அல்ல. அப்பட்டமான பொய்கள் நிரம்பிய அவதூறு. விடுதலைச்சிறுத்தைகளை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமான கட்சி என குறுக்க முனையும் பாஜக எல் முருகனின் அவதூறுகளும் அபாண்டங்களும் ஒருபோதும் மக்களிடத்தில் எடுபடாது.

எல் முருகனால் சாதி ஒழிக என உதட்டளவிலாவது சொல்ல முடியுமா? சாதி மறுப்பு திருமணங்கள் குறித்தும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் தமிரக அரசின் முன்னெடுப்பு குறித்தும் அவரது கட்சியின் கருத்தை அவரால் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்த இயலுமா என்பது போன்ற ஆயிரம் கேள்விகளை அவர் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அவரது அன்பிற்கு நன்றி சொல்கிற அதே தருணத்தில் விடுதலைச்சிறுத்தைகளை ஆதரிப்பதற்காக ஒட்டுமொத்த அருந்ததிய சமூகத்தையும் தமிழர் அல்லாதவர்கள் என மொழிவழி தேசிய பார்வை கொண்டு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

பாஜக எல் முருகன் தெரிவித்த கருத்தை ஒரு அடிமை சங்கியின் தனிப்பட்ட தாக்குதலாக கடந்து செல்லலாம். ஆனால் எங்களை ஆதரிப்பதாக சொல்லி வெளிப்படும் சீமானின் கருத்து ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. வரட்டுத்மனமான மொழிவழி தேசிய பார்வையின் அடிப்படையில் அருந்ததியர்களை தமிழர்கள் அல்ல என வகைப்படுத்துவதை ஒருபோதும் எளிதாக கடந்து போக முடியாது.

அவர்கள் இந்த மண்ணின் குடிகள் அருந்ததியர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் ஒரு அங்கம். சாதி அடையாளத்துடன் அவர்களை பிரிக்கும் எல் முருகனின் குரலைப்போலவே மொழி அடிப்படையில் எங்கள் உறவுகளை அந்நியர்களாக்குவதை ஒருபோதும் ஏற்க இயலாது. எங்கள் மீது உட்சாதி அவதூறுகளை அள்ளி தெளிக்கிற எல்.முருகனின் விஷமத்தை விட, எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக இனவாத அடிப்படையில் உழைக்கும் அருந்ததிய மக்களை மொழியால் பிரிக்கும் சீமானின் கருத்து ஆபத்தானது’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

நடிகர் விஜய்யும் மதிக்க மாட்டேங்கிறார், திருமாவளவனும் மதிக்க மாட்டேங்கிறாரு என்று நாம் தமிழர்கள் புலம்புகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link