Share via:
திருப்பதி பிரம்மோற்சவம் வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ காலங்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
* வருகிற 22ம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவையின் போது வழக்கத்திற்கு அதிகமாக ஒன்று ஒருநாள் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான கோவிலை சுற்றி அலங்காரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
* திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முன்னேற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
* கோவிலை சுற்றியும் ஏழுமலையான், பத்மாவதி தாயார் மற்றும் இந்து மத கோட்பாடுகளை விளக்கும் வகையிலான பிரம்மாண்டமான மின்னலங்கார கட்&அவுட்டுகளும், நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள மலர்களால் அலங்கரிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
* பிரமோற்சவ நாட்களில் அன்னதானக் கூடம் காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*இது தவிர திருப்பதி மலையில் ஆங்காங்கே இருக்கும் உணவு பரிமாறும் மையங்களில் பக்தர்களுக்கு தொடர்ந்து சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை உள்ளிட்ட உணவுகளை வழங்கவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சாமி ஊர்வலத்தை காண காத்திருக்கும் பக்தர்களுக்கு டீ, காபி மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கப்பட உள்ளது.
* பிரம்மோற்சவ நாட்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கான முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் விரைவாக சாமி கும்பிட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* பக்தர்களின் வசதிக்காக நிமிடத்திற்கு ஒரு பேருந்து என பிரம்மோற்சவ நாட்களில் பேருந்துகளை இயக்க ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
*ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி அதன் காட்சிகளை திருப்பதி மலையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், போலீசார் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
* பக்தர்களின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவசர தேவைகளுக்காக பக்தர்கள் அதிக அளவில் கூடும் அனைத்து இடங்களிலும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும் அதே நேரத்தில் ஆங்காங்கே முதல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
* பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதனமான லட்டு விநியோகம் தடையில்லாமல் நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற முன்னேற்பாடுகளால் பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்கள் பயன்பெற ஏதுவாக இருக்கும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் முழுவீச்சில் செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது

