Share via:
மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி விவகாரம் தொடர்பாக வரும் காலங்களில் இது போன்று அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நானே பலி ஆடு ஆகிறேன் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி என்றால் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அந்த வகையில் பல்வேறு நகரங்களில் இசைக்கச்சேரி நடத்திய ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் போதாத காலம் மழை பெய்ததால் இசைக் கச்சேரியை ஒத்தி வைக்கிறேன். எனக்கு ரசிகர்களின் நலன்தான் முக்கியம் என்று ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் செய்தி வெளியிட்டார். மேலும் ஆகஸ்டு மாதம் வாங்கிய டிக்கெட்டுகளை அடுத்த நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார் ஏ.ஆர்.ரகுமான்.
அதைத்தொடர்ந்து ஆவலாக காத்திருந்த ரசிகர்கள் நேற்று சென்னை ஈசிஆரில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசைக் கச்சேரியை காண குவிந்தனர். பழைய டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்களும், புதிதாக டிக்கெட் வாங்கிய ரசிகர்களும் ஒன்றாக குவிந்ததால், ஈசிஆரே ஸ்தம்பித்துப் போய்விட்டது.
கூட்ட நெரிசல் காரணமாக டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கூட உள்ளே அனுமதிக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால் கொதித்தெழுந்த ரசிகர்கள் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வைத்திருந்தாலும் துரதிருஷ்டவசமான சூழ்நிலையால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் நுழையாதோர் உங்கள் டிக்கெட் நகலை arr4chennai@btos.in அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குழு உங்களுக்கு விரைவில் பதில் அளிக்கும். மக்கள் விழித்துக் கொள்ள நானே பலி ஆடு ஆகிறேன். குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் சிறிய ஆறுதலை ஏற்படுத்தியிருக்கும் என்று இணையவாசிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்