Share via:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் தற்போது அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி கைது செய்யப்பட்டார்.
அவரது கைது சட்டப்படியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு அமலாக்கத்துறை தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னை நகரில் உள்ள முக்கியமான 8 இடங்களில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமலாக்கத்துறையினரின் இந்த தொடர் சோதனைகளின் பட்டியலில் இன்னும் யார், யாருடைய பெயர் அடிபடும் என்ற சந்தேகமும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சோதனை தி.மு.க. அமைச்சர்கள் மீதான பழிவாங்கும் செயல் என்று பலர் அமலாக்கத்துறைக்கு எதிராக விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்