Share via:
அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரிடம் மாவட்ட எஸ்.பி. தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியது. அதே போல் ஒரு சம்பவம் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதை ரத்து செய்து தருவதாக அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி, மருத்துவரை அணுகி ரூ.20 லட்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மருத்துவர், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்க வைக்க முடிவு செய்தார்.
அதன்படி லஞ்சஒழிப்புத்துறையினரிடம் இது குறித்து மருத்துவர் தெரிவித்த நிலையில், இன்று காலை (டிச.1) மத்திய அரசு சின்னம் பதித்த காரில் வந்த அங்கித் திவாரி, மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் அந்த காரி திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
ரூ.20 லட்சம் பணத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம், எஸ்.பி.பாஸ்கரன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். லஞ்ச ஒழிப்புத்துறையால் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.