Share via:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 21 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவர்களை பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து சென்று கொண்டு விட கல்லூரி பேருந்து தினந்தோறும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கல்லூரி பேருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரில் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.
இதில் பயணம் செய்த 5 மாணவர்களுக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. விபத்து காரணமாக மாணவ, மாணவிகள் அனைவரும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
அவ்வழியே சென்ற பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்த நிலையில் காயமடைந்த மாணவ, மாணவிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்லூரி பேருந்து திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.