Share via:
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளதால் சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் புழல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளது. அதன்படி சென்னை தியாகராயநகர், புரசைவாக்கம், பெரம்பூர் ஹைரோடு ஜமாலயா, விருகம்பாக்கம், அசோக்நகர், தேனாம்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சாலையில் நடந்து செல்பவர்களும் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
அதேபோல் கே.கே.நகர் பர்னபி சாலை, காமராஜ் சாலை, அயனாவரம், மேற்குமாம்பலம் ரெயில் நிலையம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழைநீருடன் சேர்த்து கழிவுநீரும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மழைநீர் தேங்குவது குறித்த புகார்களை சென்னை பெருநகர மாநகராட்சி புகார் மையங்கள் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.