Share via:
தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் நிலை தற்போது சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா மற்றும் அரசியல் பணிகளில் இருந்து விலகி ஓய்வில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. கட்சியை அதன் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்பு சளி, இருமல் இருந்ததால் சுவாசக்கருவிகள் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தே.மு.தி.க. அறிக்கை வெளியிட்டு வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரசிகர்களையும், கட்சித் தொண்டர்களையும் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அவர் விரைவில் பூரண குணமடைவார் என நம்புகிறோம்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 2 வார காலம் விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அறிந்த விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.