Share via:
இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை விடுத்துள்ளதை விமர்சித்து நடிகர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குனர் அமீருக்கும் இடையிலான பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக யூடியூப் சேனல்களிலும், பத்திரிகைகளிலும் இந்த விவகாரம் குறித்து செய்திகள் வைரலாகி வந்து கொண்டிருந்தன.
பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர் அமீருக்கு ஆதரவு கரம் நீட்டி வந்த நிலையில், நடிகர் சிவகுமாரின் மொத்த குடும்பத்தின் தலையும் உருள ஆரம்பித்தது. இதற்கிடையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக தாக்கி பேசினார்.
இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பருத்திவீரன் தொடர்பாக கடந்த 17 ஆண்டுகளாக பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை நான் அதை பற்றி பேசியது கிடையாது. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன்.அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழ வைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் நான் மிகவும் மதிக்கிறேன். நன்றி’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டதை விமர்சித்து நடிகரும் இயக்குனருமான சசிகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன், ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று ஞானவேல் ராஜா குறிப்பிட்டு சொல்கிறார்.
அப்படியென்றால் அந்த வார்த்தைகள் என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு என்று அடுக்கடுக்கான கேள்விகளை நடிகர் சசிகுமார் வெளியிட்டு வருவது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

