Share via:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாதந்தோறும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 தகுதியுள்ள மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வந்த நிலையில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்களும் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை எதிர்த்து கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தமிழ்நாடு அரசு கடனில் உள்ளது. இந்த சூழலில் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருவது தமிழகத்திற்கு மேலும் கடன் சுமையை அதிகரிக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இம்மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.