Share via:
கல்லூரி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த எம்.பி.ஏ.மாணவர் ஒருவர் திடீரென்று பொறியியல் மாணவரின் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முசிறியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு கல்லூரியின் வாகனத்தில் செல்வது வழக்கம். அதன்படி வழக்கம் போல் மாணவன் நிதிஷ்குமார் கல்லூரி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் அண்ணாமலை என்ற எம்.பி.ஏ. படிக்கும் மாணவன் தனது பாக்கெட்டில் மறைத்துவைத்திருந்த கத்தியால், நிதிஷ்குமாரின் கழுத்தை அறுத்துள்ளார்.
வலி தாங்காமல் துடித்த நிதிஷ்குமாரின் அலறல் சத்தத்தை கேட்ட டிரைவர், உடனடியாக வாகனத்தை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு திருப்பியதுடன் மாணவனை சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பின்னர் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மாணவன் நிதிஷ்குமார், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் முதல்கட்டமாக, ‘‘நிதிஷ்குமாருடன் அண்ணாமலை நெருங்கி பழகி வந்த நிலையில் கல்லூரி வாகனத்தில் ஒன்றாக சென்று வந்துள்ளனர். இதில் கடந்த சில நாட்களாக தன்னுடன் பேச மறுத்து வந்த நிதிஷ்குமார் வேறு இருக்கையில் அமர்ந்ததால் அண்ணாமலைக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதிஷ்குமாரின் கழுத்தை அண்ணாமலை கத்தியால் அறுத்துள்ளார்’’ என்று தெரியவந்துள்ளது. கல்லூரி வாகனத்தில் நடந்த கொடூர சம்பவம் கல்லூரி நிர்வாகத்தினர் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.