Share via:
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற வார்த்தைக்கு குஷ்பு அர்த்தம் தெரிவித்த போதும் இந்த பிரச்சினை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இதை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, குஷ்பு வீட்டை முற்றுகையிட போவதாக நேற்று (நவ.27) அறிவித்திருந்தனர். இது குறித்து எஸ்.சி.துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் கூறும்போது, குஷ்புவின் வீட்டை 500க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிக பெண்களுடன் சேர்ந்து முற்றுகையிடுவோம். சேரி என்பது இழிவானது அல்ல என்பதை ஒப்புக்கொண்டாலும், அந்த வார்த்தையை ஏன் குஷ்பு பயன்படுத்த வேண்டும். அவர் மன்னிப்புக் கேட்கும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதாலும், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா ஆகிய 2 பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் தங்கள் போராட்டத்தை நாளைக்கு தள்ளிவைத்துள்ளோம் என்று நேற்று ரஞ்சன்குமார் கூறியிருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நடிகை குஷ்புவின் வீட்டு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை நடிகை குஷ்புவின் வீட்டை எஸ்.சி.துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார், பட்டியலினப் பெண்களுடன் சேர்ந்து முற்றுகையிட்டார். பின்னர் குஷ்புவின் புகைப்படத்தை செருப்பு, துடைப்பம் மற்றும் சாணியால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குஷ்புவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பிய நிலையில், அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எஸ்.சி.துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் மற்றும் பெண்கள் பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கைது சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.