Share via:
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரப்பட்ட ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு நெஞ்சுவலிக்கிறது என்று சொன்னதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உடல்நிலையை காரணம் காட்டி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பல முறை அவரது ஜாமீன் மனு மறுக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் ரத்த அழுத்தம் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும் என்று நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா தெரிவித்தனர். மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதை முன்னிட்டு செந்தில்பாலாஜி தரப்பினர் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.