Share via:
140 கோடி மக்களின் நலன் வேண்டி பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்றிருந்த நிலையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று (நவ.26) இரவு 7.40 மணியளவில் திருப்பதி வந்து சேர்ந்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை ரேணிகுண்டா விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.
அதன் பின்னர் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக அங்கிருந்து காரில் திருமலை திருப்பதிக்கு சென்று அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுத்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து இன்று (நவ.27) காலை 8 மணியளவில் திருப்பதி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடியை, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
திருப்பதி வருகை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘திருமலையில் உளள ஸ்ரீவெங்கடேஸ்வர சாமி கோவிலில் , 140 கோடி இந்தியர்களின் நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்பாக பிரார்த்தனை செய்தேன்’’ என்று பதிவிட்டிருந்தார். மேலும் திருப்பதி மலையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.