Share via:
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. காலை நேரங்களைக் காட்டிலும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூர், அடையாறு, மந்தைவெளி, ராயப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் போட்டு மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது.
இந்த வருடம் மழையின் அளவு 45 சதவீதம் அளவுக்கு குறைவாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் மழைநீர் தேங்கியுள்ளது பொது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் அவதிக்குள்ளானார்கள். இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மழைநீர் மேலும் தேங்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.