Share via:
சர்ச்சை பேச்சு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிலையில் அதை ஏற்றுக் கொண்டதாக நடிகை திரிஷா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் முகம் சுளிக்கும் வகையில் பேசியிருந்தது திரைத்துறை மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் கண்டனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பித்தது.
அதன் தொடர்ச்சியாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ஆஜராக அவகாசம் கோரியிருந்த மன்சூர் அலிகான் திடீரென்று நேற்று மதியம் 2.45 மணியளவில் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் 1.30 மணி நேரம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நடிகர் மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு பகிரங்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளையும் குறிப்பிட்டு இறுதியில் சக நடிகையான திரிஷா தன்னை மன்னிக்கும்படியும், அவரது திருமணத்தில் திருமாங்கல்யத்தை தொட்டு ஆசீர்வாதம் செய்ய அனுமதிக்கும்படியும் படி அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பது தெய்வத்தன்மை என்று பதிவிட்டுள்ளார். மன்சூர் அலிகான் கேட்ட மன்னிப்பை தான் ஏற்றுக் கொண்டதாக திரிஷா வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

