Share via:
நடிகர் தனக்கு தொண்டை வலி இருப்பதால் பேச மிகவும் சிரமமாக இருப்பதால் நாளை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்குமாறு ஆயிரம் விளக்கு போலீசாருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரைத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டதோடு, அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை ஏற்றுக் கொண்ட டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடுப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், நடிகர் மன்சூர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனை இன்று அவரது வீட்டிற்கே சென்று கொடுத்தது. வீட்டில் மன்சூர் அலிகான் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மனை அளித்தது.
இந்த சம்மனுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 15 நாட்களாக தொடர் இருமல் இருந்த நிலையில் நேற்று மிகவும் பாதிப்படைந்து பேச சிரமப்படுவதால் தெரிவித்துள்ளார். இதனால் தான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டும், நாளை (நவ.24) தாங்களை சந்திக்க, தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.