Share via:
நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அதைத்தொடர்ந்து திரை நட்சத்திரங்களான லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், பாடகி சின்மயி, குஷ்பு உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனர்.
மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டதோடு, அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை ஏற்றுக் கொண்ட டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடுப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், நடிகர் மன்சூர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனை இன்று அவரது வீட்டிற்கே சென்று கொடுத்தது. வீட்டில் மன்சூர் அலிகான் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மனை அளித்தது.
இந்நிலையில் நடிகை திரிஷா விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.