Share via:
திரைத்துறை சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திரைத்துறை சங்கம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளின் சூப்பர் ஸ்டார்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தாஜ் கோரமண்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன், இசைஞானி இளையராஜா, அமிதாப்பச்சன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு திரைத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 35 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இவ்விழாவின் முத்தாய்ப்பாக சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகிற (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள், தொழில்நுட்பப் பணிகள் உள்ளிட்ட திரை உலக வேலைகள் அனைத்தும் நடைபெறாது. விரைவில் விழாவுக்கான அனைத்து விவரங்களும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.