Share via:
10ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தில் 15 வயதான தீபக் என்ற மாணவன் கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளியில் தூக்கில் தொங்கியபடி மாணவன் தீபக் பிணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சகமாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் கொடுத்த தகவலையடுத்து விரைந்து சென்ற கடலாடி போலீசார், மாணவனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார், தீபக்கின் சகமாணவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசார¬ணையின்படி, மிகவும் சோர்வுடன் காணப்பட்ட மாணவன் தீபக் இன்று காலை 8 மணியளவில் பள்ளிக்கு வந்ததாகவும், திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்’’ தெரிவித்தனர்.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவன் தீபக் பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளான். பெற்றோர்கள் கண்டுபிடித்து மீண்டும் தீபக்கை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர் என்று கூறப்படுவதால் தீபக்கின் மரணம் குறித்து அவரது பெற்றோரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர். 10ம் வகுப்பு மாணவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எந்த பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது என்பதை பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்கள் குழந்தைகளிடமும், மாணவர்களிடமும் அறிவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.