Share via:
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் போராடி தோல்வியடைந்த நிலையில் துவண்டு போன கணவர் விராட் கோலியை மனைவி அனுஷ்கா கட்டியணைத்து ஆறுதல் கூறிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (நவ.19) அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய & ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சுப்மன் கில், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி அசத்தலாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சுப்மன்கில் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறிய நிலையில் ரோகித்சர்மாவும் 47 ரன்களில் அவுட்டானதால் மொத்த அரங்கமே நிசப்தமானது.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாடி 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்தில் போல்டாகி வெளியேறியது ரசிகர்களின் நம்பிக்கையை முற்றிலுமாக உடைத்தது. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்த நிலையில் 10 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 50 ஓவர்களில் 240 ரன்களை சேர்த்தது.
அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி 241 என்ற இலக்குடன் விளையாட தொடங்கியதில் டேவிட் வார்னர் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மிசெல் மார்ஷல் 15 ரன்களிலும் ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்தியாதான் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்த நினைப்பை பொய்யாக்கும் வகையில் களமிற்கிய மார்னஸ் லபுசேன், டிராவிஸ் ஹெட் ஜோடி அபாரமாக விளையாடி இலக்கை மிக வேகத்தில் எட்ட முயற்சித்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இது ஆஸ்திரேலியாவின் 6வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றுப்போன கவலையில் முகமது சிராஜ் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுத போது, பும்ரா அவரை சமாதானப்படுத்தினார்.
போட்டியை பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார். பின்னர் தோல்வியால் துவண்டு போயிருந்த விராட் கோலியை, அவரது மனைவி அனுஷ்கா கட்டியணைத்து ஆறுதல் சொன்ன புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

