Share via:
நாளை மைதானத்தில் கூடும் 1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு என்று ஆஸ்திலேரிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாளை மதியம் 2 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் லீக் போட்டிகள், காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்து தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இந்தியா தான் விளையாடிய எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றி முகத்தோடு நடைபோட்டு வருகிறது.
முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்தியா, ஆஸ்திரேலியாவை நாளை (நவ.20) 2 மணியளவில் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மைதானத்தில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் விளையாட்டை கண்டுகளிக்க முடியும். அதற்கு தகுந்த வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி ஒன்றில் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், 1.3 லட்சம் இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பேட் கம்மின்ஸ், ‘‘நாளை வரப்போகிற ரசிகர்கள் கூட்டம் நிச்சயமாக ஒரு சார்பு (இந்தியா) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் 1.3 லட்சம் ரசிகர்கள் கூட்டத்தை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் எங்களுக்கு இருக்கப் போவதில்லை. நாளை எங்களின் இலக்கு நிச்சயமாக அதுவாகத்தான் இருக்கும்’’ என்று கூறினார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களுக்கு விளாசும் போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரம் செய்வார்கள். அதேபோல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் விக்கெட்டுகளை சரசரவென எடுக்கும் போதும் ஆரவாரம் செய்வார்கள். அவ்வாறு அவர்களை சந்தோஷத்தில் ஆரவாரம் செய்ய விடாமல், இந்திய அணியை தோற்கடித்தால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அமைதியாகிவிடுவார்கள் என்பதையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இந்த பதிலுக்கு நாளை இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சொந்த மண்ணில் தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

