Share via:
இன்றைய சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவிதான். இருந்தாலும் இருக்கும வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு அடங்கி செயல்பட வேண்டும் என்றும் தனது பொறுப்பை உணர்ந்து அடங்கி இருப்பதே நலம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று (நவ.18) சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்திய ஜனநாகயகம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தமிழக அரசால் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது அவரின் பொறுப்பு. அவர் கோரிய விளக்கங்களை தமிழக அரசு கொடுக்காமல் இருந்ததில்லை.
அதை விட்டுவிட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் சட்டமன்றத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘மத்திய அரசுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழக அரசுக்கான நிதியை பெற்றுத் தருவதன் மூலம் ஒரு பாலமாக செயல்படலாம். ஆனால் அதற்கு மாறாக ஆளுநர் தமிழக அரசின் அனைத்து திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார் என்று குற்றம்சாட்டி பேசினார்.
பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்ததும், ஆளுநர்கள் கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதுமாக இருக்கிறார்கள். அதனால்தான் அந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்’’ என்று சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார்.