Share via:
ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் இன்று சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 13ம் தேதி தமிழகத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியதால் அவற்றை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி இன்று கூடிய சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் 10 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை நிறைவேற்றித் தருமாறு அந்தந்த துறை அமைச்சர்கள் முன்மொழிந்த நிலையில் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதற்கிடையில் கூட்டத்தில் இருந்து பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.