Share via:
சென்னையில் கடந்த ஒரு வாரகாலத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை (நேற்று) மொத்தம் 588 பேர் திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பல்வேறு குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது வழக்கம்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 23 குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் விவரம் பின்வருமாறு:-
தி.நகரை சேர்ந்த ககன்போத்ரா, மாதவரத்தைச் சேர்ந்த ரூபேஷ், செங்குன்றத்தைச் சேர்ந்த சூர்யா, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் பிரகாஷ், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராகேஷ் என்கிற ராக்கி, மாதவரத்தைச் சேர்ந்த நவீன் என்கிற டியூக் நவீன், ஆனந்த் மற்றும் விஜய் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் வீராபுரம் பகுதியைச் சேர்ந்த அருண், திருவொற்றியூரைச் சேர்ந்த கலைவாணன், புதுநகர் பகுதியைச் சேர்ந்த லெவியார் பென்னியமான், நந்தனம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற கருக்கா வினோத் (ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசியதால் கைதானவர்), சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்கிற கருவாடு ரஞ்சித் ஆகியோரும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பிராட்வே பகுதியைச் சேர்ந்த வேலு, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பூபதிராஜன், தரமணியைச் சேர்ந்த கார்த்திக், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பரத் என்கிற பரத்ராஜ், ஓட்டேரியைச் சேர்ந்த சத்யா, அரும்பாக்கத்தைச் சேர்ந்த இன்னாசி மோசஸ் என்கிற மோசஸ் காசிமேடு பகுதியைச் சேர்ந்த மதன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.