Share via:
மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை சென்னையில் தென் மாநில தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நாளை காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் மக்களவை தேர்தலுக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
தெலுங்கானாவில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் அம்மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்றும், அந்தமான், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களில் இருந்து அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றும் தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தனது ஆலோசனையை தென் பகுதியில் இருந்து தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.