Share via:
தி.மு.க. மீனவர் அணியின் முன்னாள் அமைப்பாளரான நசரேத் பசிலியான் தற்போது அ.தி.மு.க.வில் இணைந்து அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று கூறும் அளவுக்கு ஆகிவிட்டது அரசியல்களம். ஆளும் கட்சியில் இருந்து அவ்வளவு எளிதில் யாரும் எதிர்க்கட்சிக்கு சென்றுவிடமாட்டார்கள். ஆனால் அதே நேரத்தில் தேர்தல் வரப்போகிறது என்றால் எதுவும் சாத்தியம்தான் என்பதை நிரூபித்துள்ளது இன்று நடந்த மிகப்பெரிய நிகழ்வு.
தி.மு.க. மீனவர் அணியின் முன்னாள் அமைப்பாளராக இருந்த நசேரத் பசிலியானை இன்று அ.தி.மு.க. தட்டிதூக்கி தங்கள் பக்கம் இழுத்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பசிலியான் தி.மு.க. இருக்க விருப்பமில்லாமல் இருந்துள்ளார். இதனால் அமைச்சர் மனோ தங்கராஜூடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். அப்படி பணியாற்றினாலாவது மீனவர் அணி செயலாளர் பொறுப்பு என்று நினைத்த பசிலியானுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் கட்சிப்பணியில் ஈடுபடாமல் இருந்த பசிலியானை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளார்.
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரம் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் தவிர சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாருமில்லாததால் அந்த வாய்ப்பை தற்போது பசிலியானுக்கு கொடுக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பசிலியானின் இந்த திடீர் விலகல் தி.மு.க. தலைமை மற்றும் தி.மு.க. நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

