Share via:
ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுக, புதிதாக வந்த தவெக போன்ற மூன்று
கட்சிகள்ம் கூட்டணிகள் அமையாமல் காத்திருக்கும் நிலையில், சீமான் 100 வேட்பாளர்களை
அறிவித்து அசத்தியிருக்கிறார். விழுப்புரம் தொகுதியில் பெண் மருத்துவர் அபிநயா, வேதாரண்யம்
தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது.
கூட்டணி பொறுத்தவரை திமுகவில் இருக்கும் கட்சிகள் அப்படியே தொடர்வதாக சொல்லப்பட்டு
வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்டவை உள்ளன. இதில் ஏற்கனவே
இருந்த பாமக, தேமுதிக வந்துவிடும் என்று என்.டி.ஏ. கூட்டணி காத்திருக்கிறது. அதேநேரம்,
கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் நிலைப்பாடு அந்தரத்தில் உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று
ஒரு பேச்சு ஓடினாலும், அந்த பக்கம் வலிமையான கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. இப்படி எல்லா
கட்சிகளும் தடுமாறும் நேரத்தில் சீமான் 100 வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார்.
இதுவரை எல்லா தேர்தலையும் தனியாக சந்தித்த நாம் தமிழர் இந்த தேர்தலையும்
அப்படியே எதிர்கொள்கிறது. வழக்கமாக மொத்தமுள்ள
234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும்
அறிவிப்பது வழக்கம். அதன்படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது
100 பெயர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். அதில், இடும்பாவனம்
கார்த்திக் வேதாரண்யம் தொகுதியிலும், இயக்குநர் களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும்,
வீரப்பனின் மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
வரும் பிப்ரவரி மாதம் மொத்தம் 234 தொகுதிக்கான வேட்பாளர்களையும்
ஒரே மேடையில் அறிமுகம் செய்து அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் எங்கு போட்டியிடுவார் என்று கேட்டால், அவர் போட்டியிட மாட்டாராம்.
வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி என்பதே சீமான் முழக்கம். இந்த தேர்தலும் வேட்பாளர்களுக்குப்
பயிற்சி களம் என்பதால், வெற்றி உறுதியாகும் வரை போட்டியிட மாட்டாராம். சூப்பர் எஸ்கேப்.