Share via:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தவர்களில் 56 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களுக்கான சேவை மையங்கள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பிக்க பெண்கள் வருமான வரி செலுத்தக் கூடாது, ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அதே போல் அரசு ஊழியர்களாக இருக்கக் கூடாது, ஆண்டுக்கு 3600 யூனிட்டுகள் மின்கட்டணம் செலுத்தக் கூடாது. மேலும் கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி விண்ணப்பித்திருந்த 1 கோடியே 63 லட்சம் பேரில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 15ம் தேதி காஞ்சீபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கிவைத்தார். அதற்கு முந்தைய நாள் முதலே தேர்வு செய்யப்பட்ட மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுவிட்டது. மேலும் மாதந்தோறும் 15ம் தேதி வங்கியில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் நேற்று முதல் (செப்.18) விண்ணப்பிக்கலாம் என்று அரசு ஏற்கனே அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் அதற்கான உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் இன்று முதல் உதவி மையம் செயல்படத் தொடஙகியுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து குறுஞ்செய்திஇன்று முதல் அனுப்பட்டு வரும் நிலையில் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதவி மையத்தை நாடியும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் நிராகிக்கப்பட்டதற்கான காரணத்தை தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘‘தமிழக அரசு உருவாக்கியுளள இந்த புதிய இணையதளத்தில் மகளிர் உரிமைத்தொகை தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதை மகளிர் தாமாக தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை வைத்து மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிடைக்காததற்கான காரணத்தை பெண்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.