Share via:
போதை பொருட்கள் அனுப்பியதில் கிடைக்கும் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காக
தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சினிமா நெட்வொர்க் கொஞ்சம் கொஞ்சமாக
வெளிவரத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்திற்கும் இவரது முதலீடு
அதிகம் என்று சொல்லப்படுகிறது.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் என்.ஆர்.ஐ. வின் தலைவரும்,
போதை மருந்து கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக் மற்றும் 11 பேரை குற்றவாளிகளாக அறிவித்து
சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாபர் சாதிக்கின் சகோதரர்
முகமது சலீம் மனைவி அமீனா பானு மைதீன் கனி இயக்குனர் அமீர் சுல்தான் குற்றவாளிகளாக
சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஜாபர் சாதிக் தொடர்புடைய 8 நிறுவனங்களும் பட்டியலில்
இடம்பெற்றுள்ளன.
ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் போதை மருந்து வர்த்தகத்தில்
இருந்து சம்பாதித்த பணத்தை, நிலத்திடல், திரைப்பட தயாரிப்பு, உணவகங்கள், லாஜிஸ்டிக்ஸ்
ஆகிய தொழில்களில் முதலீடு செய்து சட்ட விரோதமான பணத்தை சட்டப்பூர்வமாக்கியதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளது. இவரது போதை பணம் எப்படி உருமாறியது என்று விவரிக்கிறார்கள்.
அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் தனது தொழிலை
நடத்துவதற்காக சாதிக் 3 ஓட்டுனர்களை பணியமர்த்தியுள்ளார். அவர்கள் துபாயில் வேலை மற்றும்
இருப்பிட விசா போன்றவற்றை மோசடி செய்து பெற்றுள்ளனர் என்பது விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளது.
சென்னை திருச்சி மற்றும் டெல்லியில் ஆறு நிறுவனங்கள் மூலம் ஆஸ்திரேலியா நியூசிலாந்து
மற்றும் மலேசியாவிற்கு 257 பார்சல்களை அந்த நாடுகளில் உள்ள 12 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உணவுப் பொருள் என்ற குறியீட்டின் மூலம் அனுப்பப்படும் பொட்டலங்களில்
சூடோபொட்டமைன் போதை பொருளை உள்ளே வைத்து அனுப்பியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்கள்
சில ஜாபர் சாதிக்கிற்கு நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது என்பது அமலாக்கத்துறை மற்றும்
போதை பொருள் தடுப்பு துறை விசாரணை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.
ஏழைத் தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றவர்களை வேலைக்கு அமர்த்தி
அவர்களின் பெயரில் நிறுவனத்தை சாதிக் துவக்கியுள்ளார் என்று சொல்கிறது விசாரணை அறிக்கை.
சென்னை திருச்சியில் போதை பொருட்கள் பார்சல் செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்படுகிறது.
சென்னை டெல்லி மும்பை நகரங்கள் மூலம் வான் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுகிறது
என்பது அமலாக்கத்துறை விசாரணையின் மூலம் தெரிய வருகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க.வின்
முக்கிய மேலிடப் புள்ளிகளுக்கும் சினிமா நட்சத்திங்கள் சிலருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.
2ஜி வழக்கு முலம் தி.மு.க. தோற்கடிக்கப்பட்டது போன்று 2026 தேர்தலுக்கு போதை வழக்கு
இருக்கும் என்று சொல்லப்படுகிறது.