Share via:
எடப்பாடி பழனிசாமி
தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் ஆரம்பிக்கும் சூழலில் திடீரென அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது. இதை பாஜகவின் ஆசிர்வாதம் என்றே அதிமுகவினர் நினைக்கிறார்கள். அதோடு
எழுச்சித்தமிழரின் புரட்சிப்பயணம் சூப்பர் ரிசல்ட் தரும் என்று குதூகலத்தில் இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களில் மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் அது வதந்தி என உறுதிபடுத்தப்பட்டாலும் பாதுகாப்பு கருதி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு துளைக்காத வாகனத்துடன் தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்க உள்ளனர். எடப்பாடிக்கு இதுவரை ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான
எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்டோம் என்ற அண்ணா தி.மு.க எழுச்சி பயண இலச்சினையையும் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக கூறியவர் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தன்னுடைய சுற்றுப்பயணம் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ‘’தி.மு.க.ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்கிற கட்சிகள் எல்லாம் எங்களோடு அணி சேர வேண்டும். வீடு வீடாக போய் கதவை தட்டி உறுப்பினர் சேர்க்கும் நிலைக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
இந்த சுற்றுப்பயணம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும். திமுகவை ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணுகின்ற அனைத்து தோழமைக் கட்சிகளையும் இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்க என் அழைப்பை பதிவு செய்கிறேன்.
அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு அது விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு மிக வலுவான கூட்டணி உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும். திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை என்னன்னு நிறைவேற்றப்பட்டது என்னென்ன நிறைவேற்றப்படவில்லை எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பதை குறித்து எல்லாம் எடுத்திருப்போம்…’’ என்று தெரிவித்தார்.