Share via:

எத்தனை அன்பு இருந்தாலும், எத்தனை அழகு இருந்தாலும் ஜாதி என்று
வரும்போது, ஜாதிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த ஜாதி வெறி தாழ்த்தப்பட்ட
மக்களிடமும் அழிக்க முடியாத அளவு நிரம்பிக்கிடக்கிறது என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார்
வித்யா. தன்னுடைய சொந்த தங்கையை ஜாதி வெறிக்காக அண்ணனும் அப்பாவும் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த
வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், திருப்பூர்
விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த
30ம் தேதி வீட்டில் இருந்த பீரோ சரிந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் வித்யா சடலமாகக்
கிடந்தார் என்று சொல்லி, அவரது உடலை அடக்கம் செய்தனர்.
வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர்
பூங்கொடியிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வித்யாவின் சடலத்தை தோண்டி எடுத்து, திருப்பூர்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். வித்யா தலையின்
பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் தண்டபாணி, சரவணன்
ஆகியோரை காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரித்தனர். வெண்மணியின் காதலை கைவிட முடியாது
என்று கூறியதையடுத்து, வித்யாவை அரிவாளால் வெட்டி சரவணன் கொலை செய்துள்ளார். இதையடுத்து,
அவரை காமநாயக்கன்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களிடமும் ஜாதி அழுத்தமாகப் பதிந்திருப்பது இந்த
விஷயத்தில் அம்பலமாகியுள்ளது. ஏனென்றால் வித்யா மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச்
சேர்ந்த மருத்துவர் எனும் ஜாதியைச் சேர்ந்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில்
குயவர் எனும் ஜாதியில் பிறந்தவர் வெண்மணி. நாவிதர்களும், குயவர்களும் இன்னமும் முன்னேற
முடியாமல் தவித்துவருகிறார்கள். இந்நிலையில், ஒரு ஜாதிக்கு மற்றொரு ஜாதி தாழ்ந்தது
என்ற பார்ப்பனச் சிந்தனை இவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து இருப்பதே இந்தப் படுகொலைக்கு
அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
இந்நிலையில், இதுபோன்ற ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனிச்சட்டம்
இயற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் மாநில, மத்திய
அரசை வலியுறுத்துகிறார்கள். சொந்த தங்கையைவிட சாதி முக்கியம் என்று கருதும் இத்தகைய
ஜாதிக் கயவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை தர வேண்டும்.