Share via:
மது மற்றும் போதை
ஒழிப்பு மாநாட்டுக்கு அ.தி.மு.க.வும் வரலாம் என்று அழைப்பு விடுத்த திருமாவளவனின் பேச்சு
அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
‘வி.சி.க. கட்சி மாநாட்டுக்கு யாரை வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம்’ என்று ஒதுங்கிக்
கொண்டாலும் தி.மு.க.வினர் தொடர்ந்து கடுமையான தாக்குதல் நடத்திவருகிறார்கள்.
ஜெயலலிதா உத்தரவுப்படி
மக்கள் நலக்கூட்டணி தொடங்கி தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்த திருமாவளவன் இப்போது எடப்பாடி
பழனிசாமியிடம் விலை போய்விட்டார் என்று நேரடியாகவே தாக்குதல் தொடுக்கிறார்கள்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள்,
‘’நீங்கள் கருணாநிதி நாணய விழாவுக்கு பா.ஜ.க. அமைச்சரை அழைத்து விழா நடத்தலாம். ஆனால்,
நாங்கள் மட்டும் அ.தி.மு.க.வை அழைக்கக் கூடாதா..? கூட்டணிக் கட்சி என்பதற்காக அடிமையாக
இருக்க வேண்டுமா?’’ என்று சமூகவலைதளத்தில் மோதல் நடத்துகிறார்கள்.
அதேபோல், ‘’மகளிர்
உரிமைத்தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்கள் டாஸ்மாக் வருமானத்தால் தான் செயல்படுத்தப்படுகிறது
என்றால் அதை நிறுத்தினாலும் பரவாயில்லை மதுவிலக்கு கொண்டு வாருங்கள்’’ என்று திருமாவளவன்
பேசியதும் சர்ச்சையாகியிருக்கிறது.
தி.மு.க. அரசுக்கு
இந்த இலவசத் திட்டங்களே பெருமளவு மக்கள் ஆதரவு பெற்றுத்தந்துள்ளது. மதுவிலக்கு என்பதைக்
காரணம் காட்டி இதனை நிறுத்த வேண்டும் என்று திருமா பேசுவது, தாழ்த்தப்பட்டவர்களும்
பிற்படுத்தப்பட்டவர்களும், விளிம்பு நிலை மக்களுக்கும் செய்யப்படும் துரோகம்’ என்றும்
எகிறுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழிசை
செளந்தரராஜன், ‘’திருமாவளவன் நடத்தப் போகும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா அல்லது
கூட்டணிக்கு எதிரான மாநாடா என்பது புரியவில்லை. திமுக கூட்டணியில் இருந்தால் 2026-ல்
வெற்றி கிடைக்காது என்பதை திருமாவளவன் புரிந்து கொண்டுவிட்டார். 4 ஆண்டுகளுக்கு மேலாக
திமுகவுடன் கூட்டணியில் இருந்துவிட்டு, இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு இப்போது
மது ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கான காரணம் என்ன?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தேர்தல் சூடு இப்போதே
பற்றி எரிகிறது.