Share via:
பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும்
இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இதில் ஒரு பகுதியாக ராமதாஸ்க்கு புத்தி
பேதலித்துவிட்டதாக அன்புமணி நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரு கட்சி உருவாக்கிய
மாபெரும் தலைவரை பைத்தியம் என்று அன்புமணி பேசியிருப்பது அவரது கட்சி நிர்வாகிகளையே
அலறவிட்டுள்ளது.
தொடர்ந்து ராமதாஸ் மட்டும் குற்றச்சாட்டுகள் வைத்துவந்த நிலையில்
அன்புமணியும் இப்போது பதிலுக்குப் பேசத் தொடங்கியிருக்கிறார். ராமதாஸ் நடவடிக்கை குறித்து
அவர், ‘’12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார்.
3 பேர் தங்கள் சுய லாபத்துக்காக பாமக நிறுவனர் ராமதாஸை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
வயது முதிர்வின் காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார். அவர் திடமான
மனநிலையில் இல்லை. புத்தி பேதலித்தவர் போன்று நடந்துகொள்கிறார். ராமதாஸ் கூறியதால்தான்
2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி
வேண்டாம் என சொல்லப் போகிறேன். என்னுடைய தந்தை ராமதாஸ் சொல்லியதால்தான் பாஜகவுடன்
2024ல் கூட்டணி பற்றி பேசினேன். கடந்த 5 ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவராகவே இல்லை.
சமூக ஊடகங்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் பற்றி விமர்சனம் செய்ய
வேண்டாம். பா.ம.க. சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை பாமக நிறுவனர் வழிகாட்டுதலின்படி
கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால் அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்கின்ற சட்டவிதி
கிடையாது. பொதுக்குழுவை கூட்ட, கட்சியை நடத்த தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய
மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கொள்ளையடிப்பவனுக்கும், கொலை செய்பவனுக்கும் ராமதாஸ்
பொறுப்பு வழங்குகிறார். பாமகவில் பயிர் எது? களை எது? என்பது இப்போதுதான் தெரிகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது அத்தனையும் பொய். 2 மாதங்களாக பாமகவில் நடக்கும் நிகழ்வுகள்
எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டன.
நான் பேசாமல் இருப்பதால் ராமதாஸ் கூறும் கருத்துகள் மட்டுமே மேலோங்குவது
போல உள்ளது. தெளிவுக்காக காத்திருந்தேன்; உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும்.
எனது மனைவி பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். பாமக நிறுவனர்
ராமதாஸ் மீது காங்கிரஸ் கட்சிக்கும் விசிகவுக்கும் திடீர் பாசம் ஏன்? என்றைக்குமே ராமதாஸை
பற்றி புகழ்ந்து பேசாத திருமாவளவன், தற்போது பேசுவது ஏன்? செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர்
பாமக நிறுவனர் ராமதாஸை திடீரென சந்தித்து பேசுவது ஏன்? இவையெல்லாம் திமுகவின் சூழ்ச்சி
– இது குறித்து எல்லாம் யோசிக்க வேண்டும்” என்று பாமக சமூக ஊடக பிரிவுக் கூட்டத்தில்
பேசியிருக்கிறார்.
இதையடுத்து ராமதாஸ் என்ன பேசப்போகிறார் என்பதை அறிய அத்தனை பேரும்
ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.