Share via:
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுடன் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா சட்டமானது.
புதிய நாடாளுமன்றத்தில் கூடிய சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பேராதரவுடன் மசோதா ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இருப்பினும் மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் சட்டமாகக் கொண்டு வர பல வருடங்கள் ஆகும் என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று (செப்.29) மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாக மாறியது. இதனை மத்திய அரசு தனது அரசிதழில் அறிக்கையாக வெளியிடப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் என்பதால் வருகிற 2029ம் ஆண்டு தேர்தலுக்குள் மகளிர் 33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
