Share via:
தமிழகத்தில் மாதம்
தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்
2026 தேர்தலை முன்னிட்டு இந்த தொகையை 2000 ரூபாயாக ஸ்டாலின் அறிவிப்பார் என்று சீமான்
அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
பெண்களுக்கு உரிமைத்
தொகை கொடுப்பது தவறான வழி காட்டுதல் என்று கூறிவந்த பா.ஜ.க.வும் இப்போது திராவிட மாடலுக்கு
வந்துகவிட்டது. சமீபத்தில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரா மாநில வெற்றிக்குக் காரணம் இந்த
உரிமைத் தொகை என்றே சொல்ல வேண்டும். இந்த தேர்தலுக்காக அவசரம் அவசரமாக மகாராஷ்டிராவில்
‘லட்கி பெஹன் யோஜனா’ என்கிற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
இத்திட்டத்தில்
2.5 கோடி பெண்களுக்கு தேர்தல் வரை தலா ரூ.1,500 வீதம் ஐந்து தவணையாக வழங்கப்பட்டது.
மேலும் இது விரிவுப்படுத்தப்பட்டு, ரூ.2,100 ஆக அதிகரிக்கப்படும் என மகாயுதி கூட்டணி
வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதிகள் வாக்குகளாக மாற, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற
சட்டப்பேரவை தேர்தலை விட, தற்போது 53 லட்சம் பெண்கள் அதாவது 6 சதவிகிதம் பேர் கூடுதலாக
ஆளும் கட்சிக்கு வாக்களித்தனர்.
தமிழகத்தில் தான்
முதன்முதலில் பெண்களுக்கு மாதம் மாதம் பணம் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தை பார்த்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை
பின்பற்றின. இந்த நிலையில் தான் தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்
நடக்கவுள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படும்
என்று தெரிகிறது.
இந்நிலையில் சென்னை
அண்ணா நகரில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான், “2026 சட்டசபை தேர்தலில் 2,000 ரூபாயாக உயர்த்தி உரிமைத் தொகை வழங்கப்படும்
என்பது தான் திமுகவின் தேர்தல் அறிக்கையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும்,
‘’200 கோடி ரூபாயை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது பெரிதல்ல, நாங்கள் 2000 கோடி ரூபாய்க்குத்
தயாராக இருந்த கூட்டணியை வேண்டாம் என்று உதறியவர்கள்’’ என்று விஜய்க்கும் நேரடி அட்டாக்
கொடுத்துள்ளார்.
எப்படியோ, 2000 ரூபாய்
விவகாரம் தமிழகம் முழுக்கப் பரவியிருக்கிறது. மக்கள் ஆசையை ஸ்டாலின் நிறைவேற்ற முடியுமா?