Share via:
ஹரியானாவில் மொத்தமுள்ள
90 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற
உள்ள நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா
காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹரியானாவின் ஜூலானா
தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் வினேஷ் போகத், ‘’காங்கிரஸுக்கு
நான் மிகவும் நன்றி கூறுகிறேன், ஏனென்றால் கெட்ட காலங்களில் தான் நமக்குச் சொந்தம்
யார் என்பதை நாம் உணருகிறோம். நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜகவைத்
தவிர அனைவரும் எங்களுடன் இருந்தீர்கள். எங்கள் வலியையும் கண்ணீரையும் உங்களால் புரிந்து
கொள்ள முடிந்தது.
பெண்களுக்கு இழைக்கப்படும்
அநீதிகளுக்கு எதிராக போராடும் ஒரு சித்தாந்தத்துடன் நான் இணைந்திருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்,
மேலும் அவர்களின் உரிமைகளுக்காக தெருவில் இருந்து பாராளுமன்றம் வரை போராட தயாராக இருக்கிறேன்’’
என்று கூறியிருக்கிறார். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு காங்கிரஸ் கட்சியின் விவசாயப்
பிரிவு செயல் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில்
கடுமையான விமர்சனத்தை முன்வைக்க முடியாமல் பா.ஜ.க. அமைதி காத்துவருகிறது. அதேநேரம்,
‘’காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால் தான் பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து
வருகின்றன. காங்கிரஸ் மல்யுத்த வீரர்களை தனது அரசியலுக்குப் பயன்படுத்தியது, மல்யுத்த
வீரர்களின் எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது’’ என்கிறார்கள்.
இன்றைய நிலையில்
காங்கிரஸ் கட்சிக்கு 50க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள்
தெரிவிப்பதால் கட்சியினர் உற்சாகம் அடைந்துவருகிறார்கள்.