Share via:
திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று விஜய் கூறுவது சீமானை
கடுப்பேற்றுவதற்கும் அந்த புதிய வாக்காளர்களை சென்றடைவதற்கும்தான். திமுக எதிர்ப்பு
ஓட்டுகளை விஜய் அறுவடை செய்துவிட்டால் அதிமுக கூட்டணியும் வலு இழந்துபோகும். இதனால்
திமுக வெற்றி உறுதியாகிவிடும் என்கிறார்கள். அதோடு விஜய் பேச்சில் எக்கச்சக்க பொய்
என்று திமுகவினர் எகிறியடிக்கிறார்கள்.
திமுகவின் முப்பெரும் விழாவில் விஜய்யை ஜாடை மாடையாக விமர்சித்தார்
முதல்வர். நாகையில் விஜய் பேசியதும் வெளிநாட்டு முதலீடு குறித்து முதல்வர் பேசும் வீடியோவை
வெளியிடுகிறது திமுக. செய்தியாளர்களைச் சந்திக்கும் அனைத்து அமைச்சர்களும் விஜய் குறித்துப்
பேசுகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பச்சைச் துண்டுஅணிந்து
வந்தார் விஜய். இதுதான் சீமானுக்கு நேரடி அட்டாக் என்கிறார்கள்.
அதோடு விஜய் பேச்சில், ‘’நண்பா! உன்னதான் கேக்குறேன். இங்க இருக்கற
யூனிவர்சிட்டில எல்லா டிபார்ட்மண்ட்டும் இருக்கு? இருக்காதே. இங்க இருக்கற மெடிக்கல்
காலேஜுக்கே வைத்தியம் பாக்குற நிலைமைலதான் இருக்கு. இங்க இருக்கற மெடிக்கல் காலேஜ்ல
equiptment வேலை செய்யுதா? செய்யாதே..
திருவாரூர் ஒரு மாவட்டத்தோட தலைநகர். ஆனா, பஸ் ஸ்டாண்டுக்கு தேசிய
நெடுஞ்சாலைல இருந்து சரியா ரோடு இருக்காதே.. கும்பகோணம் – ஜெயங்கொண்டம் – விருத்தாசலம்
– நீடாமங்கலத்துக்கு ரயில் பாதை வேணும்ங்குற கோரிக்கை 50 வருஷமா நிறைவேறாம இருக்கு.
இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு. அவரோட வேலை என்ன தெரியுமா?
முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சேவை செய்யுறது. மக்கள்தான் முக்கியம்னு அவருக்கு நாம
புரிய வெக்கனும்.
இன்னொரு முக்கியமான விஷயம். இந்த மாவட்டத்துல உள்ள கொள்முதல் மையங்கள்ல
ஒரு மூட்டை நெல்லை ஏற்றி இறக்குறதுக்கு 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குறாங்களாம்.
அரசாங்கமே ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க. ஒரு டன்னுக்கு 1000 ரூபாய் கமிஷன்.
இந்த 4 ஆண்டுகள்ல பல கோடிகளை விவசாயிகள் கிட்ட இருந்து கமிஷனா புடுங்கியிருக்காங்க.
இதை வேற யாரும் சொல்லியிருந்தா கூட நம்பியிருக்க மாட்டேன். ஆனா என்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான்.
விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க. முதல்வர்
சார். இது உங்க ஆட்சியில நடந்திருக்கு.
என்னடா இவன் கேள்வியா கேக்குறான்னு நினைக்காதீங்க. தீர்வை தேடி
போறதுதான் நம்ம லட்சியமே. நம்ம தேர்தல் அறிக்கைல அதுக்கான விளக்கத்தை தெளிவா கொடுப்போம்.
பொய்யான அறிக்கை கொடுக்க மாட்டோம். எது நடைக்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டும்தான்
சொல்லுவோம் அதை மட்டும்தான் செய்வோம். கல்வி, ரேஷன், பெண்கள் பாதுகாப்பு, அடிப்படை
தேவைகளில் நோ காம்ப்ரமைஸ்’’ என்று பேசியிருந்தார்.
இந்த விஷயத்தில் விஜய் பேசியவை எல்லாம் சரிதானா என்று ஃபேக்ட்
செக் செய்திருக்கிறார்கள். அதன்படி, “மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக்
காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உண்மை அல்ல. இப்போது தமிழ்நாட்டில்
சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
இரண்டாவது கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை. உண்மை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி
வருகிறது. மூன்றாவது தகவல், மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி
இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப்
போடுவீர்களா? உண்மை : சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின்
பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது…’’ என்றெல்லாம் எடுத்துப் போடுகிறார்கள்.
திமுகவை எதிர்ப்பதாக சொல்லிவிட்டு விஜய் உதவி செய்கிறாரா என்பதுதான்
கேள்வி.