Share via:

துணை முதல்வர் உதயநிதியுடன் நேருக்கு நேராகப் போட்டியிட்டு அவரை
விஜய் ஜெயிக்க வேண்டும் என்பது தவெக தொண்டர்களின் பெருவிருப்பமாக இருந்துவருகிறது.
ஆனால், அப்படி மோதல் நடக்கும் பட்சத்தில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுவதற்கு
வாய்ப்பு உண்டு என்பதால் அந்த தொகுதியை விஜய் கை விட்டதாகத் தெரிகிறது.
எனவே, சட்டமன்றத் தேர்தலில் கீழ்க்கண்ட மூன்று தொகுகளில் இருந்து
ஒன்றை தேர்வு செய்து மக்களின் பல்ஸ் பார்க்கும் வகையில் சர்வே எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.
உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியில் நிற்கவில்லை என்றாலும், சென்னை
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடலாம் என்று அந்த தொகுதி கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதி மற்றும் சிறிய தொகுதி என்பதால் விஜய் இங்கு நின்றால்
எளிதில் ஜெயிக்கலாம் அதோடு, அதிக நாட்கள் பரப்புரை செய்வதற்கு அவசியம் இல்லை என்றும்
கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக விஜய்யின் பூர்வீக மாவட்டமான ராமநாதபுரத்தில் இருந்து
முதுகுளத்தூர் தொகுதியில் நிற்கலாம் என்று கூறப்படுகிறது. ’மண்ணின் மைந்தன்’ என்ற ரீதியில் இந்த தொகுதியில் நிற்கும்போது வெற்றி எளிதாக
இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மூன்றாவது கோவை அல்லது மதுரையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம்
என்று திட்டமிடப்படுகிறது. இதற்காகவே தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பூத் கமிட்டி
மாநாடு கோவையில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதே போல் அடுத்து மதுரையில்
ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. எங்கு மக்கள் ஆதரவு அதிகம் என்பதைக் கணக்கிட்டு ஏதேனும்
ஒரு தொகுதியில் தேர்தல் வேலைகள் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
மூன்று தொகுதிகளிலும் பணிகள் தொடங்கப்பட்டு கடைசி நேரத்தில் ஒரு
தொகுதி அறிவிக்கப்படும் என்கிறார்கள். இதையெல்லாம் அறிந்துகொண்ட தி.மு.க.வினர், ‘’தைரியம்
இருந்தால் விஜய்யை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோற்கடிக்கச் சொல்லுங்கள்’’
என்று வம்பிழுக்கிறார்கள்.