Share via:

கோமியம் மிகப்பெரிய மருந்து என்று ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதற்கு
கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் கோமியம் குறித்து ஆய்வறிக்கை இருக்கிறது,
நானும் குடித்திருக்கிறேன் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார்
காமகோடி.
இது குறித்து பேசும் மருத்துவர்கள், ‘’கோமியம் குறித்த புரளி வரும்
போதெல்லாம் அமெரிக்காவில் patent வாங்கி வைத்திருப்பதாக
சொல்வது வழக்கம். அப்படித்தான் காமகோடியும் அதை மேற்கோள் காட்டியிருக்கிறார். உண்மையில்
அமெரிக்கர்கள் யாரும் பேடண்ட் வாங்கவில்லை. நாக்பூரைச் சேர்ந்த Go Vigyan
Anusandhan Kendra என்ற பசுக்கள் ஆராய்ச்சி நிறுவனம் தான் ஆய்வு செய்திருக்கிறது.
மாடு மட்டுமின்றி மனிதரின் சிறுநீரில் நீரில் இருக்கும் யூரியா,
அமோனியா போன்ற உப்புகளில் Anti-bacterial தன்மை உடையது. எனவே கோமியத்தில் மட்டும்தான்
Anti-Bacteria, Anti-fungal properties உடையது என்று சொல்வது தவறான கூற்று. இதனை பிரித்தெடுத்து
மருந்தாகக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பது உண்மை. ஆனால், நேரடியாகக் குடிப்பது
பேராபத்து. கோமியம் குடிப்பது மோசமான பக்கவிளைவுகளை உருவாக்கும் என்று ஏராளமான ஆய்வறிக்கைகள்
வெளியிடப்பட்டுள்ளன. அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று எச்சரிக்கை
செய்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், ‘’இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
தனது ஆய்வில், மாட்டின் சிறுநீரில் மனிதருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள்
இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவை IIT இயக்குனர் காமகோடி அவர்கள்
மறுக்கிறாரா? மாடு மட்டுமல்ல மனிதன், ஆடு, எருமை, ஒட்டகம் உட்பட பல விலங்குகளின் எச்சில்,
வியர்வை, சிறுநீர் கழிவுகளிலும் கூட சில நல்லகூறுகள் இருப்பதாகத்தான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் பல தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகளும் அவற்றில் அடங்கி இருக்கின்றன என்று
தான் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன…’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
அதோடு ஐஐடி இயக்குனர் காமகோடி தினமும் பொதுமக்கள் முன்பு கோமியம்
குடித்து அவருடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும்
என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
இந்நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த நாராயணன் திருப்பதி, ‘’கேரளாவில்,
அரசுக்கு சொந்தமான ‘ஒளஷதி’ என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் மாட்டு சிறுநீர் மற்றும்
சாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘பஞ்சகவ்ய க்ரிதம்’ என்ற மருந்தை தயாரிக்கிறது. இந்த மருந்தானது,
மன நோய், மஞ்சள் காமாலை, காய்ச்சல், வலிப்பு நோய் உள்ளிட்டவைகளை குணமாக்குவதோடு, ஞாபக
சக்தியை அதிகரிக்கும் அருமருந்து என்று கூறுகிறது.’’ என்று கூறியிருக்கிறார்.
மருந்து நல்லது கோமியம் கெட்டது என்றுதானே சொல்கிறோம் என்கிறார்கள்
மருத்துவர்கள். அதெல்லாம் பா.ஜ.க.வினருக்குப் புரியாதே…