ராமர் கோயிலைக் காட்டி இந்துக்களை தட்டியெழுப்பிய பிரதமர் மோடியின் ஸ்டைலில் முருகனைக் கையில் எடுத்திருக்கும் ஸ்டாலினுக்கு தி.மு.க.விலும் கூட்டணிக் கட்சிகளிடமும் கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. இல்லை என்று நிரூபிக்க அடுத்து ஸ்டாலின் காவடி எடுப்பாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

திராவிடர் கழகத்தின் வீரமணி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் முருகன் மாநாட்டுத் தீர்மானங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பள்ளிக்கூடத்தில் பக்தி என்ற பெயரில் ஆன்மிகத்தை நுழைப்பது தவறு என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் எம்.பி.ரவிக்குமார்

அவரது அறிக்கையில், ‘’முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள், 5 ஆவது தீர்மானமாக : “முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” என்று கூறுகிறது.

8 ஆவது தீர்மானமாக : “விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் 12 ஆவது தீர்மானமாக : “முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது’’ எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல. இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது’’ என தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் பா.ஜ.க. புகுந்துவிடக் கூடாது என்று கவலைப்பட்ட காலம் போய் இப்படி தி.மு.க.வில் பா.ஜ.க. புகுந்துவிட்டதே என்று தி.மு.க.வின் மூத்த தொண்டர்கள் வேதனைப்படுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link