Share via:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோடி தமிழகம் வருவதால் அரசியல் சூழ்நிலை
சூடு பிடித்திருக்கிறது. சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு
நிதி வழங்கவில்லை என்பதால், நேரடியாக கேட்டு ஸ்டாலின் நெருக்கடி கொடுப்பாரா என்ற பரபரப்பு
எழுந்துள்ளது.
திருச்சியில் புதிய ஏர்போர்ட் முனையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக
பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மோடி தமிழகம் வருவதால், திருச்சி
ஏர்போர்ட், பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ₹1,100
கோடியில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர
மோடி திறந்து வைக்கிறார். அதோடு மேலும் சில ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட
இருக்கிறார். இந்த விழாவுக்கு முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழாவிலும்
பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதால்,
மோடியிடம் நேரடியாக தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி வேண்டுகோள்
வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு
இல்லாமல் ஸ்டாலினுக்கு மட்டுமே கைதட்டல்கள் கிடைத்தன. அதேபோல் மீண்டும் நிகழ்ந்துவிடக்
கூடாது என்பதற்காக பா.ஜ.க. தொண்டர்களை வலைவீசி தேடிப் பிடித்து விழாவுக்குக் கொண்டுவருகிறார்களாம்.
ஆக, மேடையில் சலசலப்பு நிச்சயம்.