Share via:
வரும் 9ம் தேதி செங்கோட்டையன் மீண்டும் மனம் திறந்து பேச இருப்பதாக
செய்திகள் வெளியான நிலையில், அவர் மன நிம்மதியைத் தேடி ஹரித்துவார் பயணம் செல்கிறார்.
மீண்டும் செங்கோட்டையன் பெரும் சலசலப்பு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
அவர் அமைதிக்கு மாறியிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிரவைத்துள்ளது.
இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்
செங்கோட்டையனை சூழ்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு செங்கோட்டையன்,
“நான் மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன். கடவுள் ராமர் என்பதால் ராமரை காணச்
செல்கிறேன். இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன” என்றார்.
அமித் ஷா மோடியை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, “நான் காணச்
செல்வது கடவுள் ராமரை மட்டும் தான்” என்று பதிலளித்தார். செப்டம்பர்
9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “அப்படி
ஒன்றும் இல்லை. கோவிலுக்கு போய் அமைதியாக இருக்கலாம் என்கிறிருக்கிறேன். ஹரித்துவார்
கோவிலில் ராமரை காண செல்கிறேன்” என்றார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற
உங்களது கருத்துக்கு வரவேற்பு எப்படி உள்ளது, பதவியை நீக்கியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்.
“பதவி நீக்கம் தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை, பொதுச் செயலாளர் எடுக்கும்
முடிவுக்கு நான் கருத்து சொல்ல இயலாது. காலம் தான் பதில் சொல்லும். வலிமை பெற வேண்டும்
என்று நினைப்பவர்களின் அனைவரது எண்ணவோட்டத்தை தான் நான் பிரதிபலித்தேன். அதனால் தான்
எனது கருத்துக்கு வேறு யாரும் மாறுபட்ட கருத்தை யாரும் சொல்ல வில்லை. அனைவரது மனதிலும்
இது தான் உள்ளது. தொண்டர்களின் மன நிலை நான் சொல்வது சரி என்பதால் கமெண்ட்ஸ் இல்லை.
தொண்டர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து செல்கின்றனர்.இரண்டு நாட்களில் பத்தாயிரம் பேர்
சந்தித்து உள்ளேன்” என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும்
நீக்கிவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று புரியாமலே டெல்லி செல்கிறார்.
ஆன்மிகப்பயணம் என்றால் பாஜகவுடன் ரகசிய சந்திப்பு இருக்கும் என்கிறார்கள்.
அதேநேரம் செங்கோட்டையனுக்கு நெருக்கமானவர்கள், ‘கட்சியில் இருந்து
பொறுப்புகள் எடுக்கப்பட்டதை செங்கோட்டையனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதனால், அரசியலை
விட்டு விலகும் மனநிலைக்கு வந்திருக்கிறார். டெல்லியில் கிடைக்கும் உறுதிமொழியைப் பொறுத்தே
அவரது நிலைப்பாடு இருக்கும்’’ என்கிறார்கள்.