Share via:

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் எந்த சிக்கலும்
நடந்துவிடக் கூடாது என்பதால், இன்று காலையிலேயே திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா
கன்வென்சன் செண்டருக்கு விஜய் வந்துவிட்டார். இந்த விழாவுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். வருவாரா,
மேடை ஏறுவாரா என்பதே பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இன்றைய முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் சுமார் 3000 நிர்வாகிகள்
பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும்
வகையில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து, கழகத்தின் அமைப்பை வலுப்படுத்தும்
பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதால்,
வேறு பெரிய கட்சிகள் எதுவும் கைவசம் இல்லை என்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறார் நடிகர்
விஜய். இப்போதைய நிலையில் விஜயகாந்த் கட்சியான தே.மு.தி.க. மட்டுமே அதிருப்தி நிலையில்
தனியே இருக்கிறார்கள். எனவே, அவர்களையாவது பிடித்துக்கொள்ள வேண்டும் என்று திட்டமிடுவதாக
சொல்லப்படுகிறது.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட நேரத்திலேயே சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை மேடை
ஏற்றுவதற்கு விஜய் திட்டமிட்டார். ஆனால், பேச்சுவார்த்தை சரிப்பட்டு வராத காரணத்தால்
அது நிறைவேறவில்லை. இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வேண்டும், ஊழலற்ற ஆட்சிக்கு சகாயம்
ஐ.ஏ.எஸ். உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று அவரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
இதையடுத்து அவர் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துள்ளது. எப்படியாவது
அவரை கட்சிக்கு அழைத்துவாருங்கள் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார். ஆகவே, மேடை ஏறுவாரா
என்பது இன்று தெரிந்துவிடும்.
இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோரின் ஐ.டி. விங்க்
மோதல் அதிகரித்துவருகிறது. விஜய்யை கொள்ளைக்கூட்டத் தலைவன் ரேஞ்சுக்கு சித்தரித்து
வெளியிட்டிருக்கும் கார்டு படு சர்ச்சையாகியுள்ளது. நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா பாடிகார்டு
போன்று விஜய்க்கு இணையாக வருகிறார்கள். அதில் ஜனகராஜ் போன்று புஸ்ஸி ஆனந்த் காமெடியாக
சித்தரிக்கப்பட்டுள்ளார். விஜய்யை காலி செய்வதற்கு இவர்கள் இருவரே போதும் என்று அவரது
கட்சியினரே சிரிக்கிறார்கள். பொதுக்குழுவில் புதிதாக என்ன பேசப்போகிறார் என்று பார்க்கலாம்.