Share via:
அன்னபூர்ணா தொழிலதிபரை மிரட்டி வரவழைத்து மிரட்டிய விவகாரம் இன்னமும்
அடங்கவில்லை. ராகுல் காந்தி ஒவ்வொரு மேடையிலும் நிர்மலா சீதாராமனை மிரட்டல் ராணி என்று
அம்பலப்படுத்தி வருகிறார். வரி போட்டு மக்களையும் தொழிலதிபர்களையும் மிரட்டி வந்த நிர்மலா
சீதாராமன் மீது மிரட்டிப் பணம் வசூல் செய்ததாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை
அடுத்து, அவருடைய பதவிக்கு ஆபத்து எழுந்துள்ளது.
மத்திய பாஜக அரசுதான் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையை அறிமுகப்படுத்தியது.
இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நிதி அளிக்கப்பட்டன. சட்டவிரோதமாக கட்சிகளுக்கு
கறுப்பு பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையை ஒழிக்கும் வகையில் இந்த புதிய நடவடிக்கையை
மத்திய அரசு கொண்டு வந்தது. இருப்பினும், இந்த தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை
இல்லை எனக்கூறிய உச்சநீதிமன்றம், அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், தேர்தல்
பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஒவ்வோர் ஆண்டும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த
நபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்கினர் என்ற விபரத்தை வெளியிடவும் உத்தரவிட்டது.
கடந்த தேர்தல் நேரத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. மிரட்டி
பணம் வசூல் செய்த விவகாரம் பெரும் குற்றச்சாட்டாக எழுந்தது. எதிர்க் கட்சிகள் இதை கடுமையாக
எதிர்த்தார்கள். , மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை
வைத்து மத்திய அரசு மிரட்டி, பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணத்தை நன்கொடை பெற்றதாக
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. யாரெல்லாம் பா.ஜ.க. அரசுக்கு பணம் கொடுத்தார்கள்
என்று ஒரு பெரிய பட்டியல் வெளியாகி நாட்டையே அதிரவிட்டது.
இதையடுத்து தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும்
ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் பெங்களூருவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை
விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு தொடர்ந்த மக்களதிகார
சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் இணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர், தனது வழக்கில் நிர்மலா சீதாராமன்,
அமலாக்கத்துறை, ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய
பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம்
மிரட்டி பணம் பறித்ததற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பெங்களூருவில் உள்ள திலக் நகர்
காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எதிர்க் கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டாலே, உடனே அமலாக்கதுறை துணையுடன்
அவர்களைப் பிடித்து ஜெயிலில் போட்டு விசாரணை நடத்துவதை பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்துவருகிறது.
அதே பாணியில் நிர்மலா சீதாராமன் மீது அமலாக்கத்துறை விசாரணை நடக்குமா..?
அவராக பதவி விலகுவாரா அல்லது பதவி விலக்கப்படுவாரா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
பா.ஜ.க. ஆட்சியில் ஊழலே நடைபெறவில்லை என்று கூறும் மோடி இதற்கு என்ன பதில் சொல்லப்
போகிறார்..?