Share via:
ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடி நடவடிக்கைகளுக்கு எதிராக வரலாற்று
சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்து
வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் எல்லோரும் வரவேற்றுள்ளார்கள்.
ஆனால் ஆளும் பா.ஜ,க. அரசு இதனை கடும் பின்னடைவாகப் பார்க்கிறது. ஆகவே, இந்த தீர்ப்புக்கு
எதிராக சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற மோடி ஆலோசனை செய்வதாகத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின்
மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார். இவற்றில்
பல்கலைக்கழக சட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பான பத்து மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பி அனுப்பினார். இதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி
ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால், மசோதாக்களின் மீது ஆளுநர் எந்த
பதிலையும் அளிக்கவில்லை. இதையடுத்து, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்
தமிழ்நாடு அரசு இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்
அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன. செவ்வாய்க் கிழமையன்று (ஏப்ரல் 8) இந்த வழக்கில்
தீர்ப்பளித்த நீதிபதிகள், “சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களையும்
ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் எதிரானது”
எனக் கூறினர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி
தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர். குறிப்பாக,
அந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல்
வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு
அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு தன்னுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றமே ஒப்புதல்
அளித்து தீர்ப்பளித்துள்ளது. ‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமல்லாமல்
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை
மற்ற மாநில முதல்வர்கள் வரவேற்றுள்ளனர்.
இதையடுத்து தி.மு.க.வினர், ‘’மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு!
டம்மி ரவி உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்’’ என்று கொண்டாடி வருகிறார்கள்.
இந்த விவகாரம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
ஆளுநர்கள் மூலம் மாநில அரசை ஆட்டிப்படைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆகவே, இந்ததீர்ப்புக்கு
எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆளுநர் அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியாத
வகையில் சிறப்பு சட்டம் நிறைவேற்றவும் ஆலோசனைகள் நடைபெறுகின்றன. மீண்டும் மத்திய அரசுக்கும்
மாநில அரசுக்கும் ஈகோ போட்டி ஆரம்பமாகிவிட்டது.