Share via:

மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்லும் பிரதமர் மோடி 6 ஆம்
தேதி வரை அங்கு இருக்கிறார். கச்சத்தீவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வினர்
பேசியதை அடுத்து, அதனை மீட்பதற்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கைக்குச் சென்ற நரேந்திரமோடி இது குறித்து, ‘’கொழும்புக்கு
வருகை தந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள்
அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து ஆவலுடன்
உள்ளேன். மழையிலும் என்னை வரவேற்றவர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுரா குமார தசநாயக, பிரதம மந்திரி
கலாநிதி ஹரிணி அமரசூரியா ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார். அதோடு, எரிசக்தி, வர்த்தகம்,
தகவல் தொடர்பு, நவீன மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாட்டு வளர்ச்சி
மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும்
இந்திய நாட்டின் நிதி உதவியுடன் திரிகோணமலை மாவட்டம், சம்பூரில் அமைக்கப்பட்டு இருக்கும்
சோலார் மின் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு ராமேசுவரம்
மீனவர்கள் 11 பேரை நிபந்தனை மற்றும் அபராதம் எதுவும் இல்லாமல் விடுதலை செய்து இலங்கை
ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும்
யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனால்
அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத் தீவு
விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இதை பற்றியும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசிடம்
வலியுறுத்த வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இந்த விஷயங்கள் பேச்சுவார்த்தைப்
பட்டியலில் இல்லை என்பதால், இதை கண்டுகொள்ள மாட்டார் என்றே தெரிகிறது.