Share via:
நடிகர் விஜய் மாநாடு போட்டதிலிருந்து தி.மு.க.வும் அதன் கூட்டணிக்
கட்சிகளும் அவரை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சித்
தலைவர் எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவு கொடுத்திருப்பது மிகப்பெரும் அரசியல் திருப்பமாகப்
பார்க்கப்படுகிறது.
இன்று எடப்பாடி பழனிசாமி, ‘’மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற
நல்ல நோக்கத்தில் விஜய் பேசுகிறார். அதிமுக சிறப்பாக செயல்படுவதால் விஜய் அதிமுகவை
விமர்சிக்கவில்லை என்று நினைக்கிறேன். விஜய் அவருடைய கட்சித் தலைவர், அவர் கட்சி கொள்கையை
சொல்கிறார் இதில் விமர்சிக்க என்ன இருக்கிறது.
திமுகவும் பாஜகவும் மறைமுக உறவு வைத்துள்ளது என்பதை நாங்கள் சொன்னோம்,
இதை இப்போது எல்லோரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.. விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு
குறித்த கற்பனைகளுக்கு, ஊடக பரபரப்புக்காக பதிலளிக்க விரும்பவில்லை. கூட்டணி அமைப்பது
என்பது அந்த சூழ்நிலையில் அமைவது. முதல் முதலாக ஒரு மாநாடு விஜய் நடத்தியுள்ளார். மக்களுக்கு
சேவை செய்யவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் விஜய் பேசுகிறார். அதை எடுத்தவுடன் விமர்சிக்க
விரும்பவில்லை. எம்ஜிஆர் ஒரு தலைவராக எப்படி வாழவேண்டும் என வாழ்ந்து காட்டியுள்ளார்.
அதை குறிப்பிட்டு பேசுவதில் என்ன தவறு.
அனைத்து கட்சிகளுக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. ஆனால் கொள்கையே
இல்லாத கட்சி திமுக தான். திமுக மற்றும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்
எல்லாம் ஒரே கொள்கையுடன் இருக்கிறார்கள் என்றால் ஒரே கட்சியாக இருக்கலாமே? அஇஅதிமுகவை
பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு…’’ என்று நேரடியாகவே விஜய்க்கு
ஆதரவு கொடுத்திருக்கிறார்.
அண்ணா தி.மு.க.வின் வாக்குகளை விஜய் அபகரித்துவிடுவார் என்று பேசப்படும்
நிலையில், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொடுத்திருப்பது முன்கூட்டியே தேர்தல்
கூட்டணிக்கு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது என்று அ.தி.மு.க.வினரே ஆச்சர்யமாகிறார்கள்.
விஜய் ரியாக்ஷனைப் பார்க்க வெயிட் பண்ணுவோம்